Wednesday 7 November 2018

திருமுறை





சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. - திருமுறை



தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவ பெருமானே.

Monday 5 November 2018

தேவாரம் முழுமையையும் பாராயணம் செய்த பலனைப் பெற - திருஞானசம்பந்தர்


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த

பல்பெயப்பத்து தேவாரத் திருப்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை

பண் - வியாழக்குறிஞ்சி
 




திருச்சிற்றம்பலம்

ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை              05

ஓரா னீழ லொண்கழ லிரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்                10
    
நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானில மஞ்சக்                   15
    
கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா மந்தக் கரணம்
முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து     20
    
நான்மறை யோதி யைவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை         25
    
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை                     30
    
வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை        35
    
ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும்                             40

மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையி னொருமையு மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணிய னறியும்             45

அனைய தன்மையை யாதலி னின்னை
நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே. 



          ↫  திருச்சிற்றம்பலம்  ↬
 

திருவாசகம்-திருப்புலம்பல்





உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே.   (
பாடல் 3)


திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தப் பெருமானே! உறவினரை யான் விரும்புவேனல்லேன்; வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்; புகழை விரும்புவேன் அல்லேன்; கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன். கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும். உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கண் கன்றையுடைய பசுவினது மனத்தைப் போலக் கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்.